அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!

உலக சமுதாய சேவா சங்கம்





26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website :http://vethathiri.org/

நான் யார்?










நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி









வாழ்க்கைத் தத்துவம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையி லிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்கு தலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்றஇயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்றஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கை யெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித சக்தி மகத்தான சக்தி

உடல் லகுவாக இருக்க வேண்டும் Ease ful Body. மனம் அமைதியாக இருக்க வேண்டும் Peaceful Mind. வாழ்க்கை உபயோகமாக இருக்க வேண்டும் மள்ங்ச்ன்ப் கண்ச்ங். அதற்கு நாம் வாழும் காலத் திலேயே வாழ்ந்து கொண்டு

இருக்கும் தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள உடற்பயிற்சிகள், தவங்கள், காயகல்ப பயிற்சி, தற்சோதனை முறைகள் உறுதுணையாக உள்ளன.

அவர் பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் அருட்பெருஞ்சோதி நகரை உருவாக்கி அங்கு ஓம்கார மண்டபம் அமைத்து, தங்கி இன்றும் உலக அமைதிக்காக மவுனம் உட்பட பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு

இவ்வுலக இன்னல்களிலிருந்து விடுபட இரண்டொழுக்கப் பண்பாடு கூறுகிறார்.

1. “நான் எனது வாழ்நாளில் பிறரது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்”2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.ஆகா! என்ன அற்புதமான வரிகள். அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் துன்பமே இவ்வுலகில் இருக்காது.இன்புறுவோம்! இயல்பாய் வாழ்வோம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் பரிசாக இரண்டொழுக்காப் பண்பாட்டை, மேற்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி தன்னம்பிக்கை மாத இதழ்

இறைநீதி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன்



நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்".


-அருட்தந்தை
Showing posts with label வாழ்க்கை மலர்கள். Show all posts
Showing posts with label வாழ்க்கை மலர்கள். Show all posts

இறைவனின் கருவி

Sunday, August 17, 2008

இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம்-இறைவனுடைய கருவியாகவே இருக்கக் கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும். அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம்.

ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்தத் தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இதுவரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மெளன காலம்

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கர்ப்பகாலப் பொறுப்புகள்

குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.

மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆன்மாவின் மூன்று நிலைகள்

காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.

கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மக்களின் அறிவு வளர்ச்சி

அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.

யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.

இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தாத்தாவும் பேரனும்

தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல்-விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.

பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும், பேரனும் அதாவது இறைவெளியும், நிழல் விண்ணும் ஆடும் கூத்துத் தான் பிரபஞ்சம்.

இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும், நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்துத் தானே இவையனைத்தும்!

இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிறபோது அது அலை. அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.

இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில் தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அலையின் தன்மை

நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.

பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.

அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உயிரும் மனமும்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திறமை உயர்வு

ஏதோ ஒரு வகையிலோ, சில வகைகளிலோ, திறமைசாலியாக நீ இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். உன் திறமைக்குக் கடந்த கால மனித இனத் தொடரும் இக்காலச் சமுதாயத் தொடரும் ஆதாரம் என்பதை மறந்துவிடாதே. இந்த உணர்வு உன் திறமைக்கு வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பளிக்கும். கடமையிலே உன்னை உயர்த்தும், உனது திறமையை மேலும் மேலும் அதிகரிக்கும்.

ஒவ்வொரு துறையிலும் நீ அடைந்துள்ள உயர்வைவிட அதிகமான உயர்வை அடைந்துள்ளோர் பலர் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடாதே.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது உன்னைவிடத் திறமைசாலிகளைப் பாராட்டுவதும் உன்போன்ற திறமையில் முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதும் உன் திறமைக்கோர் சிறப்பளிக்கும் சாதனமாகும்.

சுயநல நோக்கத்தோடு பிறரைப் புகழ்வது கயமைச் செயல் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

முயற்சியளவே ஞான விளைவு

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சமபங்கு

எப்பொழுது யாராவது ஒருவர் ஏதாவது ஓரிடத்தில் உண்மைப் பொருளைப் பற்றியும், இயற்கை இரகசியங்களைப் பற்றியும் கண்டுபிடித்துச் சொல்வாரானால், அப்போது அது மனித இனத்தினுடைய முழு உரிமை ஆகிவிடுகிறது. அன்றி அது கண்டுபிடித்தவருடைய தனிப்பட்ட உரிமையாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சி நியதிப்படி பிறந்து, பொருள் வளத்திலே உயர்ந்து, சமூகத்தால் கல்வி அறிவு ஊட்டப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருவதால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் பணத்திற்காக, அல்லது அரசியல் செல்வாக்கிற்காக வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.

இந்த இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கையைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நான் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவாறு விளக்கியிருக்கிறேன். மனித வள மேம்பாட்டுக்காக, காலத்திற்கேற்ற தேவையை உணர்ந்து, பேரறிவாகிய அந்த இயற்கை என்னும் பேராற்றலே யார் ஒருவர், தனது மன அலையை மிக நுண்ணிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கொள்கிறாரோ, அவர் மூலமாக உண்மைப் பொருளைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.

ஆகவே, தத்துவ உண்மைகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இவை எவையானாலும் அவை இயற்கையெனும் பேராற்றலால் தகுதியான ஒரு நபர் மூலம் வெளிப்படுத்தப்பட்டவையேயாகும். தெரிந்து முயன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒன்றுமே இல்லை. எனவே, அவை அனைத்திலும் உலகில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் சமபங்கு உண்டு என்பது விளங்கும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திருவிளையாடல்

இயக்க மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கும் தூய இறைவெளிதான் இருப்பு மண்டலம். தூய வெளியெனும் பிரம்ம நிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால், எந்த ஒன்றையும், மற்ற ஒன்றிலிருந்து பிரிந்து போகாமல், சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஒவ்வொரு வேதான் நுண்ணணுவும் தனது தற்சுழற்சி விரைவாலும், யோகான் எனும் நுண்ணணுவின் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் காந்த தன்மாற்ற அலைகளாலும், நுண் விண்களிடையே குறிப்பிட்ட அளவில் தொலைவு அமைந்திருக்கின்றது. அது காக்கவும் படுகின்றது.

எனவே, நுண்ணணுவானாலும் சரி, அண்டங்கள் ஆயினும் சரி, அவற்றில் எழுந்து இயங்கும் அலையின் அழுத்தத்திற்கு மேலாக எதுவும் விலகிப் போகாமல் காப்பது சூழ்ந்தழுத்தம் அனைத்தியக்க அருட் பேராற்றலே. அதே போன்று எந்த நுண்ணணுவோ, அண்டங்களோ - அவற்றிலிருந்து வெளியாகும் அலைகளின் தள்ளும் ஆற்றலுக்கு மேல் விலகவும் முடியாது. இந்த நியதி தான் வான்காந்த ஆற்றலின் விளைவு.

மேலும், நுண்ணணுக்களாகிய வேதான்கள் இடையிலும், கோள்களின் இடையிலும், கோள்களின் உட்புறம் உள்ள இறைவெளியிலும் கணக்கிட முடியாத அளவில் யோகான் நுண்ணணுக்கள் தோன்றிக் கொண்டேயும், அவை தன்மாற்றங்களை அடைந்து கொண்டேயும் இருக்கும் விந்தைகளே வான்காந்தம் எனும் மறைபொருள் பேரியக்க மண்டலத்தில் ஆற்றும் திருவிளையாடல்கள். இயற்கையின் இயல்பாக நடைபெறும் தெய்வீக நிகழ்ச்சிகளைத் திருவிளையாடல் என்று வழங்குகிறோம்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சத் சங்கம்

உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில்படும் அல்லல்களையும், துன்பங்களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்குக் காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங் கொண்டுள்ளன.

பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும், தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல் இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்க முடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மகா மறைபொருள்

இருப்பு களம், இயக்க களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதனின் முன்பிறவிக்கும் பின் பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும், வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்

மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் "ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்" - இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் "மதம்" (Religion) என்பதாகும்.

அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் "ஞானம்".

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

முத்திறம்

"பரிணாமம்" என்பது விண் முதற்கொண்டு அவையிணைந்து பஞ்சபூதங்களாகவும், அண்ட கோடிகளாகவும், உயிரினங்களாகவும் மாற்றம் பெறும் நிகழ்ச்சி.

"இயல்பூக்கம்" என்பது எல்லாத் தோற்றங்களும் அணுக்களின் கூட்டுத் தான் என்றாலும், அவற்றில் காந்தம் உற்பத்தியாகி, அதன் தன்மாற்றங்கள் - அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகியவற்றால் அந்த வடிவம் பெறும் குணங்களுக்கேற்ப, அததற்கு உரிய இயக்கச் சிறப்புப் பொருத்தமாக அமையும். இதுவே இயல்பூக்கமாகும். மேலும் இயல்பூக்க நியதியால், உருவங்களில் அமைப்பு மாற்றங்களும், குணநலமாற்றங்களும் உண்டாகும்.

"கூர்தலறம்" என்பது செயல் அல்லது இயக்கத்திற்கேற்ற விளைவு எனும் இயற்கை நீதி. எல்லையற்ற இறையாற்றலை, இருப்பு நிலையாக - ஈர்ப்பு ஆற்றலாகக் கொண்டால், அதன் ஆற்றல் பெருகி மடிப்புற்று வழிந்தோடும் நிகழ்ச்சியே விண் என உணர்ந்தோம். இறைவெளியென்பது நிலைபொருள். அதிலிருந்து தோன்றிய நுண்விண் அலையாகும். பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தும் விண் கூட்ட நிகழ்ச்சிகள் தானே?

அதாவது அலைகள் ஒன்றோடொன்று கூடுவதும், மோதுவதும், பிரிவதும் தான். அனைத்தும் அலை நிகழ்ச்சிகளே. எந்த அலையானாலும், காந்த ஆற்றல் இல்லாதது இல்லை. அலைகள் கூடினாலும், மோதினாலும் அவற்றிலிருக்கும் காந்த ஆற்றல், அந்தந்தப் பொருள், இடம், வேகம், சூழ்நிலை இவற்றிற்கேற்பத் தன்மாற்றங்களைப் பெறும். அதற்கேற்றவாறு விளைவுகள் காணப்படும். இந்த இறைநீதி தான் செயலுக்கு அல்லது இயக்கத்திற்கு ஏற்ற விளைவு என்ற "கூர்தலறம்" ஆகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குத்தி விளக்கிய அறிவு

ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள்.

அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மனமும் பிரம்மம்

மனிதனின் பருவுடலைப் பற்றி ஆராய்வோம். பலகோடி விண் துகள்கள் கூடிய ஒரு கூட்டுத் தோற்றமே பருவுடல். விண் என்பது இறை வெளியே - தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால், திணிவு பெற்று, ஒரு புள்ளி வடிவத்தோடு சுழன்றியங்கும் அலை இயக்கம். எனவே, இறைநிலையே விண்ணாகி, விண் கூட்டுச் சேர்க்கையால் ஏற்பட்ட கோடிக்கணக்கான பரு உருவத் தோற்றங்களில் ஒன்றாகப் பருவுடல் விளங்குகின்றது. ஆறாவது அறிவான நுண்மாண் நுழைபுலனறிவால் நாம் உணரும் போது, பருவுடல் பிரம்மமாகவே விளங்குகின்றது. அடுத்து உயிர் என்பதைப் பற்றி ஆராய்வோம்.

கோடிக்கணக்கான விண்துகள்கள் பரு உடலுக்குள் சூக்குமமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. விண் என்பது இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்த விளைவான சுழலலைதானே? எனவே, விண் துகளான உயிரையும் பிரம்மமாகவே உணர்கிறோம். மூன்றாவதாகக் காந்த ஆற்றலின் அலை நிலையான மனம் என்பது என்னவென்று சிந்திப்போம். இறைநிலையிலுருந்து தோன்றிய விண், விரைவாகத் தற்சுழற்சியாக இயங்கும்போது, அதைச் சுற்றியுள்ள இறைவெளியின் சூழ்ந்தழுத்த ஆற்றலால் விண்ணுக்கும், இறைவெளிக்கும் இடையே ஏற்படும் உரசலால் எழும் நுண்ணலைகள் காந்தம் எனப்படும்.

இந்தக் காந்தமானது, பஞ்ச பூதங்களாகிய விண்கூட்டு அடர்த்தி நிலைகளான விண்வெளி, காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் இவற்றில் முறையே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாகத் தன்மாற்றம் பெறுகிறது. இவ்வைந்து வகையான காந்தத் தன்மாற்றங்களை பஞ்சதன்மாத்திரை என்று கூறுகிறோம். இதே காந்தமானது உயிர் உடல்களில் மேலே கூறப்பெற்ற ஐந்து மாற்றங்களோடு, உணர்வு ஆற்றலுடைய அலை நிலையான மனமாகவும் திகழ்கின்றது. இங்கு மனமும் பிரம்மமே என்று உணர்கிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தெய்வீகப் புதையல்

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பொருளும், மதிப்பும்

நம்மிடம் 10ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இரண்டுமே காகிதம் தான். ஆனால், அதற்கு மதிப்பு என்று ஒன்று உள்ளது. அதே போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பொருள் நமக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்தே அந்த மதிப்பும் அமையும். அந்தப் பொருள் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது எண்ணிறந்த மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது என்கிற போது அதற்கு மேலும் மதிப்பு உயருகிறது. பொருளினால் மதிப்பே தவிர எனது, என்னுடையது என்பதினாலே மதிப்பு உயருவதில்லை.

ஆகவே, இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் தவம், தற்சோதனை இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான். நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், அடைய வேண்டும், முழு முதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி