Tuesday, August 19, 2008

தவம் என்றால் என்ன ?


நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள புறத்தையும் உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கான பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிதான் ‘தவம்’ . அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’ ஞானம் பெருகி அஞ்ஞானத்தின் அவலம் குறைகிறது. கானகம் சென்றுதான் ‘தவம்’ செய்யவேண்டுமா? வேண்டாம்! இல்லறத்திலிருந்தே ‘தவம்’ செய்யலாம் தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும். ஞானிகள்தான் ‘தவம்’ இயற்றவேண்டுமா? இல்லையில்லை! குடும்பத்தாறுக்கே தவமும், அகத்தாய்வும் (தற்சோதனை) மிகவும் அவசியம் மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன ஆழுக்கை நீக்கும் !
இரண்டையும் பெற அன்பர்களே வாரீர் ! ‘தத்துவம், விஞ்ஞானம், வாழ்க்கை நெறி ‘ இவை பற்றிய சிந்தனைத்தூண்டல் தான் மனவளக்கலை தவ மையங்கள், அறிவுத்திருக் கோயில்களில் தரப்படுகிறது.

- மகரிஷி
வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம்

தியானம்


தியானம் ஆன்மீக வழிபாட்டின் உயர் மட்ட நிலையாகும். உலகியல் சிந்தனைகளில் ஈடுபட்டு காரணமின்றி மனம் அலையாய் அலைகிறது. உள்மனத்தில் ஒரு போராட்டமே நிகழ்கிறது. அந்த மனத்தின் அலைச்சுழலை ஒருநிலைப்படுத்தி இறை நிலையோடு அதை ஆழ்த்துவதே தியானம். மனவலிமை, மன அமைதி, மனநிறைவு, மனதில் ஒரு தெய்வீகத்தன்மை இழையோடும் ஆனந்தம், வெற்றிகளையும், தோல்விகளையும் சம்மாக பாவிக்கும் தன்மை, அனைத்தும் தியானத்தால் அடையும் நன்மைகள்! மன ஒருமைப்பாடு இல்லாதவன் எதிலும் வெற்றி கானவே இயலாது. நம்முள்ளேயே அறிவாக இருக்கும் இறைவனை அறிந்து கொள்ள தியானம் அடிப்படையாகும்.

"உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்க"

என்பது ஔவையார் வாக்கு. இவ்வுடலைக் கொண்டுதான் ஆன்மாவை அறியலாம்! ஐம்புலன் அடக்கம், நம்முள் உள்ள தேவையில்லாததை நீக்குதல், தேவையேயில்லாத உடம்பின் சுகங்களுக்கு எல்லை கட்டுதல் தியானப் பயிற்சியில் நாம் பெறமுடியும்.
தியானம், (தவம்) செய்ய தயங்காதீர்கள்! எளிய முறையில் நிறைவான தியானம் செய்வதற்கு பழக்கும் நிலையம் தான் மனவளக்கலை மன்றங்கள்! அறிவுத்திருக்கோயில்ல்கள்! மகான் வேதாத்திரி மகரிஷியின் தத்துவ பயிற்சிகளே மனிதனை மாமனிதனாக மாற்றும் அன்பர்களே! மன்றத்திற்கு வாருங்கள்.

வாழ்க வளமுடன்.

Sunday, August 17, 2008

இறைவனின் கருவி

இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம்-இறைவனுடைய கருவியாகவே இருக்கக் கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும். அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம்.

ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்தத் தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இதுவரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மெளன காலம்

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கர்ப்பகாலப் பொறுப்புகள்

குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.

மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆன்மாவின் மூன்று நிலைகள்

காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.

கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மக்களின் அறிவு வளர்ச்சி

அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.

யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.

இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தாத்தாவும் பேரனும்

தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல்-விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.

பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும், பேரனும் அதாவது இறைவெளியும், நிழல் விண்ணும் ஆடும் கூத்துத் தான் பிரபஞ்சம்.

இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும், நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்துத் தானே இவையனைத்தும்!

இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிறபோது அது அலை. அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.

இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில் தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அலையின் தன்மை

நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.

பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.

அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உயிரும் மனமும்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திறமை உயர்வு

ஏதோ ஒரு வகையிலோ, சில வகைகளிலோ, திறமைசாலியாக நீ இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். உன் திறமைக்குக் கடந்த கால மனித இனத் தொடரும் இக்காலச் சமுதாயத் தொடரும் ஆதாரம் என்பதை மறந்துவிடாதே. இந்த உணர்வு உன் திறமைக்கு வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பளிக்கும். கடமையிலே உன்னை உயர்த்தும், உனது திறமையை மேலும் மேலும் அதிகரிக்கும்.

ஒவ்வொரு துறையிலும் நீ அடைந்துள்ள உயர்வைவிட அதிகமான உயர்வை அடைந்துள்ளோர் பலர் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடாதே.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது உன்னைவிடத் திறமைசாலிகளைப் பாராட்டுவதும் உன்போன்ற திறமையில் முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதும் உன் திறமைக்கோர் சிறப்பளிக்கும் சாதனமாகும்.

சுயநல நோக்கத்தோடு பிறரைப் புகழ்வது கயமைச் செயல் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

முயற்சியளவே ஞான விளைவு

விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.

அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைநிலையுணர்ந்த அறிவு

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனிதப் பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப் போற்றப்படுகிறது. அதுவே தான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.

இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணு வெனும் நுண்ணியக்கத் துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்த பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், 'பிரம்மம்' எனும் தெய்வீகப் பேராற்றலின் சரித்திரம்

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவு தான் இறைநிலையுணர்ந்த அறிவு. அதுவே தான், முடிவு நிலையான மனத்தின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சமபங்கு

எப்பொழுது யாராவது ஒருவர் ஏதாவது ஓரிடத்தில் உண்மைப் பொருளைப் பற்றியும், இயற்கை இரகசியங்களைப் பற்றியும் கண்டுபிடித்துச் சொல்வாரானால், அப்போது அது மனித இனத்தினுடைய முழு உரிமை ஆகிவிடுகிறது. அன்றி அது கண்டுபிடித்தவருடைய தனிப்பட்ட உரிமையாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சி நியதிப்படி பிறந்து, பொருள் வளத்திலே உயர்ந்து, சமூகத்தால் கல்வி அறிவு ஊட்டப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருவதால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் பணத்திற்காக, அல்லது அரசியல் செல்வாக்கிற்காக வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.

இந்த இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கையைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நான் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவாறு விளக்கியிருக்கிறேன். மனித வள மேம்பாட்டுக்காக, காலத்திற்கேற்ற தேவையை உணர்ந்து, பேரறிவாகிய அந்த இயற்கை என்னும் பேராற்றலே யார் ஒருவர், தனது மன அலையை மிக நுண்ணிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கொள்கிறாரோ, அவர் மூலமாக உண்மைப் பொருளைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.

ஆகவே, தத்துவ உண்மைகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இவை எவையானாலும் அவை இயற்கையெனும் பேராற்றலால் தகுதியான ஒரு நபர் மூலம் வெளிப்படுத்தப்பட்டவையேயாகும். தெரிந்து முயன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒன்றுமே இல்லை. எனவே, அவை அனைத்திலும் உலகில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் சமபங்கு உண்டு என்பது விளங்கும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஐந்திணைப்புப் பண்பாடு

தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றிச் சிந்தித்தல், தன் குறையுணர்தல், தான் திருத்தம் பெறத் திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனைப் பயிற்சியில் அடங்கும்.

தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கிி ஒவ்வொன்றாகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. முதற் பயிற்சி 'நான் யார்?' என்ற வினாவினை எழுப்பி விடைபெறுதலாகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது. இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.

இரண்டாவது பயிற்சி எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குபடுத்துவதாகும். தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.

மூன்றாவது பயிற்சி அறுகுணச் சீரமைப்பு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும் நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு நற்குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுணச் சீரமைப்பாகும். மனிதன் உணர்ச்சி வயப்படும்போது தான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலை பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுணச் சீரமைப்பு இன்றியமையாததாகும்.

நான்காவது பயிற்சி கவலை ஒழித்தல். அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும் கணிப்புத் தவறுகளும் ஏற்படுகின்றன. இவைகளையெல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லாக் கவலைகளையும் ஒழித்து நலம் பெறக் கவலையொழித்தல் என்ற பயிற்சி நன்கு உதவுகின்றது. குண்டலினி யோகத்தால் விாழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்துவிடும். எனவே, இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திருவிளையாடல்

இயக்க மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கும் தூய இறைவெளிதான் இருப்பு மண்டலம். தூய வெளியெனும் பிரம்ம நிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால், எந்த ஒன்றையும், மற்ற ஒன்றிலிருந்து பிரிந்து போகாமல், சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஒவ்வொரு வேதான் நுண்ணணுவும் தனது தற்சுழற்சி விரைவாலும், யோகான் எனும் நுண்ணணுவின் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் காந்த தன்மாற்ற அலைகளாலும், நுண் விண்களிடையே குறிப்பிட்ட அளவில் தொலைவு அமைந்திருக்கின்றது. அது காக்கவும் படுகின்றது.

எனவே, நுண்ணணுவானாலும் சரி, அண்டங்கள் ஆயினும் சரி, அவற்றில் எழுந்து இயங்கும் அலையின் அழுத்தத்திற்கு மேலாக எதுவும் விலகிப் போகாமல் காப்பது சூழ்ந்தழுத்தம் அனைத்தியக்க அருட் பேராற்றலே. அதே போன்று எந்த நுண்ணணுவோ, அண்டங்களோ - அவற்றிலிருந்து வெளியாகும் அலைகளின் தள்ளும் ஆற்றலுக்கு மேல் விலகவும் முடியாது. இந்த நியதி தான் வான்காந்த ஆற்றலின் விளைவு.

மேலும், நுண்ணணுக்களாகிய வேதான்கள் இடையிலும், கோள்களின் இடையிலும், கோள்களின் உட்புறம் உள்ள இறைவெளியிலும் கணக்கிட முடியாத அளவில் யோகான் நுண்ணணுக்கள் தோன்றிக் கொண்டேயும், அவை தன்மாற்றங்களை அடைந்து கொண்டேயும் இருக்கும் விந்தைகளே வான்காந்தம் எனும் மறைபொருள் பேரியக்க மண்டலத்தில் ஆற்றும் திருவிளையாடல்கள். இயற்கையின் இயல்பாக நடைபெறும் தெய்வீக நிகழ்ச்சிகளைத் திருவிளையாடல் என்று வழங்குகிறோம்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சத் சங்கம்

உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில்படும் அல்லல்களையும், துன்பங்களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்குக் காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங் கொண்டுள்ளன.

பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும், தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல் இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்க முடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மகா மறைபொருள்

இருப்பு களம், இயக்க களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதனின் முன்பிறவிக்கும் பின் பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும், வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்

மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் "ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்" - இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் "மதம்" (Religion) என்பதாகும்.

அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் "ஞானம்".

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

முத்திறம்

"பரிணாமம்" என்பது விண் முதற்கொண்டு அவையிணைந்து பஞ்சபூதங்களாகவும், அண்ட கோடிகளாகவும், உயிரினங்களாகவும் மாற்றம் பெறும் நிகழ்ச்சி.

"இயல்பூக்கம்" என்பது எல்லாத் தோற்றங்களும் அணுக்களின் கூட்டுத் தான் என்றாலும், அவற்றில் காந்தம் உற்பத்தியாகி, அதன் தன்மாற்றங்கள் - அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகியவற்றால் அந்த வடிவம் பெறும் குணங்களுக்கேற்ப, அததற்கு உரிய இயக்கச் சிறப்புப் பொருத்தமாக அமையும். இதுவே இயல்பூக்கமாகும். மேலும் இயல்பூக்க நியதியால், உருவங்களில் அமைப்பு மாற்றங்களும், குணநலமாற்றங்களும் உண்டாகும்.

"கூர்தலறம்" என்பது செயல் அல்லது இயக்கத்திற்கேற்ற விளைவு எனும் இயற்கை நீதி. எல்லையற்ற இறையாற்றலை, இருப்பு நிலையாக - ஈர்ப்பு ஆற்றலாகக் கொண்டால், அதன் ஆற்றல் பெருகி மடிப்புற்று வழிந்தோடும் நிகழ்ச்சியே விண் என உணர்ந்தோம். இறைவெளியென்பது நிலைபொருள். அதிலிருந்து தோன்றிய நுண்விண் அலையாகும். பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தும் விண் கூட்ட நிகழ்ச்சிகள் தானே?

அதாவது அலைகள் ஒன்றோடொன்று கூடுவதும், மோதுவதும், பிரிவதும் தான். அனைத்தும் அலை நிகழ்ச்சிகளே. எந்த அலையானாலும், காந்த ஆற்றல் இல்லாதது இல்லை. அலைகள் கூடினாலும், மோதினாலும் அவற்றிலிருக்கும் காந்த ஆற்றல், அந்தந்தப் பொருள், இடம், வேகம், சூழ்நிலை இவற்றிற்கேற்பத் தன்மாற்றங்களைப் பெறும். அதற்கேற்றவாறு விளைவுகள் காணப்படும். இந்த இறைநீதி தான் செயலுக்கு அல்லது இயக்கத்திற்கு ஏற்ற விளைவு என்ற "கூர்தலறம்" ஆகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குத்தி விளக்கிய அறிவு

ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள்.

அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மனமும் பிரம்மம்

மனிதனின் பருவுடலைப் பற்றி ஆராய்வோம். பலகோடி விண் துகள்கள் கூடிய ஒரு கூட்டுத் தோற்றமே பருவுடல். விண் என்பது இறை வெளியே - தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால், திணிவு பெற்று, ஒரு புள்ளி வடிவத்தோடு சுழன்றியங்கும் அலை இயக்கம். எனவே, இறைநிலையே விண்ணாகி, விண் கூட்டுச் சேர்க்கையால் ஏற்பட்ட கோடிக்கணக்கான பரு உருவத் தோற்றங்களில் ஒன்றாகப் பருவுடல் விளங்குகின்றது. ஆறாவது அறிவான நுண்மாண் நுழைபுலனறிவால் நாம் உணரும் போது, பருவுடல் பிரம்மமாகவே விளங்குகின்றது. அடுத்து உயிர் என்பதைப் பற்றி ஆராய்வோம்.

கோடிக்கணக்கான விண்துகள்கள் பரு உடலுக்குள் சூக்குமமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. விண் என்பது இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்த விளைவான சுழலலைதானே? எனவே, விண் துகளான உயிரையும் பிரம்மமாகவே உணர்கிறோம். மூன்றாவதாகக் காந்த ஆற்றலின் அலை நிலையான மனம் என்பது என்னவென்று சிந்திப்போம். இறைநிலையிலுருந்து தோன்றிய விண், விரைவாகத் தற்சுழற்சியாக இயங்கும்போது, அதைச் சுற்றியுள்ள இறைவெளியின் சூழ்ந்தழுத்த ஆற்றலால் விண்ணுக்கும், இறைவெளிக்கும் இடையே ஏற்படும் உரசலால் எழும் நுண்ணலைகள் காந்தம் எனப்படும்.

இந்தக் காந்தமானது, பஞ்ச பூதங்களாகிய விண்கூட்டு அடர்த்தி நிலைகளான விண்வெளி, காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் இவற்றில் முறையே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாகத் தன்மாற்றம் பெறுகிறது. இவ்வைந்து வகையான காந்தத் தன்மாற்றங்களை பஞ்சதன்மாத்திரை என்று கூறுகிறோம். இதே காந்தமானது உயிர் உடல்களில் மேலே கூறப்பெற்ற ஐந்து மாற்றங்களோடு, உணர்வு ஆற்றலுடைய அலை நிலையான மனமாகவும் திகழ்கின்றது. இங்கு மனமும் பிரம்மமே என்று உணர்கிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தெய்வீகப் புதையல்

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பொருளும், மதிப்பும்

நம்மிடம் 10ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இரண்டுமே காகிதம் தான். ஆனால், அதற்கு மதிப்பு என்று ஒன்று உள்ளது. அதே போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பொருள் நமக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்தே அந்த மதிப்பும் அமையும். அந்தப் பொருள் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது எண்ணிறந்த மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது என்கிற போது அதற்கு மேலும் மதிப்பு உயருகிறது. பொருளினால் மதிப்பே தவிர எனது, என்னுடையது என்பதினாலே மதிப்பு உயருவதில்லை.

ஆகவே, இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் தவம், தற்சோதனை இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான். நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், அடைய வேண்டும், முழு முதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தெய்வீக நீதி

அறிவை வைத்துக் கொண்டு ஒருவர், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து அப்படி ஆராய்வதன் மூலமாக வலி, நோய்கள், பிணக்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, அமைதியோடும், பேரின்பத்தோடும் வாழக்கூடிய உயர் வாழ்க்கையைப் பெற முடியும். உலகத்தில் உள்ள சடப்பொருள்களும் சரி, உயிரினங்களும் சரி, எதுவானாலும் அவற்றோடு தொடர்பு கொள்ளுகிற போது ஒரு இணக்கமான, அளவு முறைக்கு உட்பட்ட வகையில் விழிப்பு நிலையோடு செயல்பட முடியும்.

பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும், உயிரினமானலும் அல்லது வேறு இரசாயக் கூட்டுப் பொருளானாலும், அது பரிணாம வளர்ச்சி நியதிப்படி, ஆதிநிலையிலிருந்து தற்போதைய நிலை வரை தொடர்ந்து ஜீவகாந்தத் தன்மாற்றத்தின் குண இயல்புகளோடு தான் அமைந்திருக்கிறது. எந்த ஒரு உயிரினத்துடனோ அல்லது சடப்பொருளுடனோ தொடர்பு கொள்ளும்போது ஒருவர் உருவம், நிறம், குணமாக அதனதன் தன்மையை அடைந்து தன்னுடைய சீவகாந்தத்தின் தன் மாற்றத்தையே எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் செலவிடுகிறார்.

அவருக்கும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளுக்கும் இடையே நடைபெறுகிற அலை இயக்கம் மோதுதல், பிரதிபலித்தல் என்கிற தன்மைகளோடு, அவரையும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளையும் ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாக்கி அதற்கேற்ற விளைவுகளைத் தருகிறது. இந்த விளைவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும், தொடர்பு கொள்ளுகிறவருடைய இயற்கையான தன்மையையோ அல்லது தொடர்பு கொள்ளப்படுகிற பொருள் அல்லது நபரின் இயற்கையான நன்மையையோ பாதிக்கக் கூடாது. அதாவது எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும் புலன் மயக்கில் அதனோடு சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆன்மீக அறிவு பெற்ற ஒருவர் இதைத் தெய்வநீதியாகவும், வாழ்க்கை ஒழுக்கமாகவும் கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வாழ்க்கைத் தத்துவம்

வாழ்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்தில் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பின் நிலையேயாகும்.

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்த வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோன்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உன்னுள் நான்; என்னுள் நீ

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களாலான பருப்பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது.

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை.

வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருவில் திரு உடையார்

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.

ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.

மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).

நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்

அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மெய் வழி அறிவு

உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயக்க இடமாகவும், முடிவாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழு முதற் பொருள். இதன் இயக்கமே உயிர். உயிரின் படர்க்கையே மனம் என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.

இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ, பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத்துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலாலும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.

மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்கக்கள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை ஓதியவனும் ஓதியதை உணர்ந்து தானானவனும் ஞானி.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தன்னிறைவுத் திட்டம்

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும், திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?' என்று கணித்துக் கொள்ளுங்கள்.

அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில், சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன.

உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும்.

இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்மயோகம்" இதில் அடங்கியிருக்கிறது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குண்டலினி யோகம்

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வேண்டியதெல்லாம் கிடைக்கும்

நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).

அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணப் பதிவு

ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இயற்கை உணர்வு (Natural Instinct)

இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு "Instinct" என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த "Instinct" என்பதற்கு மேலே "Intelligence" அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் "Intelligence" என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த "Intelligence" வந்த பிறகு தான் "அறிவு", "Knowledge" வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது "Intelligence". அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' "Knowledge" என்று சொல்லலாம்.

இந்த "Collective Knowledge" வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் "Intuition" உண்டாகிறது. அதில் இருந்து தான் எல்லாம்வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடலோம்பல் இறைவழிபாடு

இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடும், முறையோடும் சாப்பிடுவோம். ஆனால், சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக் குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கித் துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையால் செய்யும் தவறுகள் தான் துன்பமாக விளைகிறது. இறையின் ஆற்றலால் எல்லாம் சரியாக நடக்கிறது.

ஆனால், நாம் ஆசையினால், மறதியினால், இறைவனின் செயலை மறந்ததினால் அதிகமாகச் சாப்பட்டோம். இறைவன் செயலில் குறுக்கிட்டோம். உறுப்புக் கெட்டுவிட்டது. அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்கிறோம். இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத் தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பந்தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறபோது இறையுணர்வு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல், அதிகமாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வதும் இறை வழிாபாடு தானே?

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்

கடவுள் எனப் படுபவனே மனிதனானான்,
கருத்தியங்கி, கருத்துயர்ந்து, கருத்தறிந்தான்;
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான்
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான்
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான்
கடவுள் ரகசியமதனை வெளியாய்க் காட்டும்
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி.

எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.

மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான்.

இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.

மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் - அறிய வேண்டிய நிலையில் - உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை.

அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி

கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூடக் கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும், விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர், உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி! முயற்சி!! வெற்றி!!! என்ற மந்திரத்தைத் தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வரக் கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் யார்?

நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு.

உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது.

நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது?

என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கோள்களும், ஜீவனும்

ஒவ்வொரு கோளும் பல இரசாயனங்களைக் கொண்டு அவை பரிணாமம் அடைந்ததற்குத் தக்கவாறு அலை வீசிக் கொண்டேயிருக்கும். இரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள் மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே, அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும். ஒன்பது கோள்களினுடைய தன்மையும், அதன் அலைகள் மூலம், நமக்கு வந்து கொண்டேயிருக்கும்.

உலகமும், மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருப்பதனால் அவ்வப்போது அவற்றின் தூரம் வேறுபடுகிறது. ஒரு சமயம் 10 கோடி மைல் தொலைவிலிருக்கும் ஒரு கோள் இன்னொரு சமயம் 100 கோடி மைல் தொலைவிற்குச் சென்று விடும். அவ்வப்பொழுது கிட்டவோ அல்லது தொலைவாகவோ போகப்போக அந்த அலையினுடைய அழுத்தம் வேறுபடும்.

அதற்குத் தகுந்தவாறு அந்த அலையிலிருந்து வந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஜீவனுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், அந்தக் கோள்களின் மாற்றத்தினால் இரசாயன வேறுபாடு உண்டாகும். அதைக் கொண்டு உடலுக்கு நன்மை தீமை, அறிவுக்கு நன்மை தீமை இவைகள் எல்லாம் உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

விடுதலைக்கான வழி (The path to freedom)

சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுவது போல, இறை நிலையிலிருந்து புறப்பட்டுப் பல தலைமுறைகளாக ஜீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான இறைவனை நாடியே அலைகின்றது. அத்த கைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் ஈடுபடுகிறது. இங்கு தான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பெருக்கிக் கொள்ளுகிறது.

எவ்வளவு தான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், முறை மாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உன்னையே நீ அறிவாய்

இரும்பு ஒரு கரண்டியாக்கப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இரும்பு என்றாலும் கரண்டி என்றாலும் அது ஒரு பொருளையே குறிக்கும். அதுபோல் தெய்வம் என்ற அருட்பேராற்றலே பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாமாக இருக்கிறது. நீயுமாக மனித வடிவமாக இருப்பதும் அதுவே. இந்தக் கருத்தில் மனத்தைப் பதித்துக் கொண்டு உண்மையை உணர்ந்து கொள். நீயென்றாலும் தெய்வமென்றாலும் ஒரு பொருளையே குறிக்கும்.

கரண்டியை உருக்கிவிட்டால் இரும்புக்குக் கொடுத்த வடிவம் மறைந்து விடுகிறது. அவ்விரும்புக்கு கரண்டி என்று கொடுத்த பெயர் மறைந்து விடுகிறது. என்ன மிச்சம்? இரும்பு தான். இரும்பைப் பல வடிவங்களாக்கி, பெயர்களை அக்கருவிக்குக் கொடுக்கிறோம். வடிவத்தையும் பெயரையும் கழித்துவிட்டால் மிஞ்சுவது இரும்புதானே!

அதேபோன்று, நீ உன்னையறிந்து கொள்ள முயற்சி செய்! மனிதனென்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப்பதிவுகளையும் கழித்துப் பார்! உன்னில் மிஞ்சுவது எல்லாம் வல்ல அருட்பேராற்றலாக விளங்கும் பரம்பொருளே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சமநிலை (Equanimity)

அறிவின் முழுமை பெற்ற ஞானியருக்கு இறைநிலையின் முழு வடிவமே பிரபஞ்சம். அதிலுள்ள எந்தப் பொருளையும் வெறுப்பு கொண்டு ஒதுக்கி விட முடியாது. பொதுவாக, துன்பம் தரும் ஒரு பொருளை, உடலுயிரை, செயலை வெறுப்பது, ஒதுக்குவது, பகைப்பது, அழிப்பது என்பது மனிதனுடைய இயல்பாகும். இது தன்முனைப்பால் உணர்ச்சி வயப்பட்டு வெளியாவதாகும்.

ஆனால், ஞானிகளோ இந்த எல்லை கட்டிய மனோ நிலையைக் கடந்தவர்கள். இப்பேரியக்க மண்டலத்திலுள்ள எந்தப் பொருளானாலும் அது பரிணாமத் தொடரிலே ஒரு தனித்த மதிப்புடையது. குறுகிய அறிவுடையோர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் தேவையே இல்லை என்றோ அல்லது ஏதோ ஒரு வகையில் துன்பமளிப்பதாகவோ தோன்றும்.

ஆயினும், அதுவே பிரபஞ்சப் பரிணாமம் என்ற இயக்க நியதியிலே வேறு பல நன்மைகளிலிருந்து பிரிக்க முடியாத, பல நன்மைகளுக்கு இயல்பூக்க வித்தாகவும் இருக்கும். சில நிகழ்ச்சிகள் மனிதன் அறியாமையால் ஆற்றிய செயல்களின் விளைவாக இருக்கும். அவை துன்பமளிப்பவையேயாயினும் அந்த வினைப்பதிவு அழியும் மட்டும் அது நிலைத்துத் தான் இருக்கும்.

இவற்றையெல்லாம் உணர்ந்து தெளிந்த அறிவிலே திட்டமிட்டு வாழ்பவர் ஞானி. அவருக்கு வெறுப்பு ஏது? மேலும் அவ்வாறு துன்பம் தந்தவரிடமும் வெறுப்புக் கொள்ளாத சால்பு நிலையைச் சார்ந்துள்ளவரே உண்மையில் ஞானியாவார். சிறந்த ஒரு குருவும் ஆவார். பிறருக்கு வழிகாட்டக் கூடிய தகுதியும் பெற்றவராவார். உணர்ச்சியிலே இந்தச் சமநிலை (Equanimity) அடைந்தவர் காட்டும் பாதையிலே நாம் சென்றோமானால் துன்பம் நம்மை அணுகாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உணவும், மருந்தும்

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்".

எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும்.

உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று.

மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு.

அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வேண்டல் வளம்

ஒவ்வொருவருடைய தேவையையும், விருப்பத்தையும் உணர்ந்து, எந்த இடத்தில் குறை இருக்கிறது, எந்த இடத்தில் நிறை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு உதவி செய்வது, வாழ்வது தான் அன்பும் கருணையும். இதைத் தமிழில் வேண்டல் வளம் என்று சொல்வார்கள். வளம் என்றால் நம்மிடத்தில் இயற்கையாக உள்ள இருப்பு என்பதாகும். வேண்டல் என்றால் அவ்வப்பொழுது ஏற்படக் கூடிய தேவை என்ன என்பதாகும். இதே போன்று பிறரின் வேண்டல் வளம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வளத்தைப் பயன்படுத்தவும், வேண்டலைப் பூர்த்தி செய்யவும் உதவ வேண்டும் என்பதுதான் வேண்டல் வளம் தெரிந்து விளைவறிந்து வாழ்தல் என்பதாகும்.

இப்பொழுது அந்த வார்த்தை வழக்கில் வண்டவாளம் என்றாகி விட்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும், நம்மோடு இணைந்து உள்ளவர்களுக்கும் வேண்டல் வளம் தெரிந்து விட்டால், நான் எந்த அளவில் என்னுடைய வேண்டல் வளம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு அவர்களின் மூலமாக என்ன பெற முடியும், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்தால், உயிர்களிடத்து அன்பும், கருணையுமாக இருக்கக் கற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் ஒவ்வொருவரும் அன்பையும், கருணையையும் எழுச்சி பெறச் செய்து, அதன் வழியே வாழ முற்படும்பொழுது எல்லா உயிர்களோடும் ஓர் இனிமை ஏற்படும் அல்லவா? அந்த இனிமை தான் வாழ்வில் முழுமை தரும், அறிவை உயர்த்தி வைக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மிருகம், மனிதன், மாமனிதன்

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.

ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆக்கினை

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை (14 to 40 cycles per second) அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது 'பீட்டா அலை' (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி - அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். 'பீட்டா அலை' (beta wave)யில் இருந்து 'ஆல்பா அலை' (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.

உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் 'ஆல்பா அலை' (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், 'ஆல்பா அலை' (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.

இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கவலை ஒழித்தல்

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. நிகழ்ச்சிகளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனால், பிரச்சினைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.

ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அவை வந்து கொண்டும் போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சினை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள். அதே போன்று தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டு விடும்.

பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டுத் தைரியமாக அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரியான தீர்வு தானாகவே கிடைத்து விடும். இங்கு இயற்கைச் சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சினையும் பெரியதாகத் தோன்றும். அதற்குத் தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவறாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதைக் கடைபிடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால், மனதின் சுமையும் நீங்கிவிடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைவனின் நிழல்

மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.

பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.

கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.

இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வினையும் பயனும்

நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே" என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது "சொர்க்கம்", "நரகம்" என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்; தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு" என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். "இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம். செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். 'வினையும் பயனும்' என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஓர் உலகம்

மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக் கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை.

மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.

மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது.

எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்




'படிக்கும் போது தவம் செய்யலாமா?
இரவில் செய்யலாமா என்றெல்லாம்
கேட்பார்கள் . தவத்திற்கு காலமும் வேண்டியதில்லை திசையும்
வேண்டியதில்லை . அறிவை
விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம்.
அதற்கு காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தகாலத்திலும்
செய்யலாம் இதையெல்லாம் உணர்ந்து
நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம்
செய்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும், சிக்கல்கள் வராமல் காத்துக்கொள்ளவும் வேண்டிய விழிப்பு
நிலையை இந்த தவம் உங்களுக்குக்
கொடுக்கும்'


- அருட்தந்தை

வேதாத்திரி மகரிஷி வாழ்க்கைக் குறிப்பு



வாழ்க்கைக் குறிப்பு


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.

இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார்.


18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளை கற்றார் மகரிஷி.


தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்று தேர்ச்சிப் பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார


ஆன்மிகத் தேடல்


தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார்.

இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35வது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களை தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.


நூல்கள் இயற்றல்


இந்தப்பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களை பல கவிகளாகவும், கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.


1957ல் மகரிஷி ‘உலக சமாதானம்’ என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.


அருட்பெருஞ்சோதி நகர்


கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.


மறைவு


அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் 28 மார்ச் 2006 செவ்வாய்க்கிழமை மறைந்தார்.

Monday, August 11, 2008

எண்ணப் பதிவு --- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணம் எங்கும் செல்லும்



எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தியானத்தின் நன்மைகள் (Benefits of Meditation) -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :

1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.

4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குண்டலினி யோகம்-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவிஇருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல,உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.


ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள்,மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும்பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம்,அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

எளியமுறை குண்டலினி யோகம்

· மறதியும்-விழிப்பும்

· எளிய முறை குண்டலினி

· ஆக்கினைச் சக்கரம்

· சாந்தியோகம்

· துரிய நிலை

· தற்சோதனை

· துரியாதீதம்

· சமுதாயச் சீர்திருத்தம்

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.

உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.

ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.

மறதியும்-விழிப்பும்

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.

உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும்,இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.

இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.

இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும்(Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins)போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை,ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.

தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி,ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு,இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.

எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ,பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி,செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு,முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்

ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.

துரிய நிலை

ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை

துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம், சொல்,செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை,உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம்

தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.

முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியேகுண்டலினி யோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்

உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில்,மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும்,வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.

பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும்,உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை

1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.

2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.

3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.

4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.

5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.

இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி